ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் விடுக்கப்பட்டுள்ள பரிந்துரை
கொழும்பு 3இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு அருகில் வைத்து, கடந்த ஜூலை 9ஆம் திகதியன்று ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரொமேஸ் லியனகேயை கொழும்புக்கு வெளியே இடமாற்றம் செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.
குறித்த உத்தரவுகளை உடனடியாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான விசாரணைகள் சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது.
அத்தகைய விசாரணைக்கு ஆதரவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவை கொழும்பிற்கு வெளியே உள்ள விசேட அதிரடிப்படையின் மற்றுமொரு தளத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விடயம்
இந்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்க ஆகியோர் மனித உரிமைகள் முன்னிலையில் அழைக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவ நேரத்தில் தற்போதைய ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் பாதுகாப்புக் குழுவின் தளபதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே செயற்பட்டதாக தெரியவந்துள்ளது. அவரது தலைமையில் 140 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த இடத்தில் கடமையில் இருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களால் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்பதில் சந்தேகமில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஊடகவிளலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை நியாயப்படுத்த முடியாது என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகேவின் நேரடி உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் போது தான் அங்கு இல்லை என மறுத்ததாகவும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், ரொமேஷ் லியனகே ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பித்துள்ள பரிந்துரை
எனினும் மனித உரிமைகள் ஆணையம் தாக்குதல் சம்பவத்தின்போது அவர் இருந்தமை தொடர்பான காணொளிக் காட்சிகளை அவருக்கு காட்டியுள்ளது.
எனவே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.ரொமேஷ் லியனகே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சத்தியப்பிரமாணம் செய்து ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜூலை 9ஆம் திகதி ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
இது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற நடத்தை எனவும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் விசாரணைகளில் குறைபாடு
அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணத் தவறியமையே பொலிஸ் விசாரணைகளின் குறைபாடுகளில் ஒன்று என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சிவில் நடவடிக்கைகளுக்கு உருமறைப்பு சீருடைகள் பொருந்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளது.
எனவே சிவில் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அணியும் சீருடை
தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அவதானம் செலுத்த வேண்டும் எனவும்,சிவில்
கடமைகளுக்கு ஈடுபடுத்தப்படும் போது பொருத்தமான சீருடைகளை வழங்குவதற்கு தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு
பரிந்துரை செய்துள்ளது.