சீன அமைச்சரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கம்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) 2022 ஜனவரி 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக newsin.asia இணையம் தெரிவித்துள்ளது.
கடுமையான டொலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடு இல்லாமை மற்றும் சர்வதேச நிதி மதிப்பீடுகளில் பாரிய வீழ்ச்சி போன்றவற்றால், இலங்கை நாட்டின்பொருளாதாரம் மோசமான நெருக்கடியில் இருக்கும்போது சீன அமைச்சரின் வருகை நிகழ்கிறது.
இதன்போது இலங்கைக்கான உதவியை பீய்ஜிங் நிர்வாகம் அறிவிக்கும் என்று கொழும்பின் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக newsin.asia இணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் கருதி, வாங் யீ பல முதலீட்டு முன்மொழிவுகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் வாங் இயின் பயணத்தை தொடர்ந்து பல பெரிய அளவிலான சீன முதலீடுகள் இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
கெரவெலபிட்டிய அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான New Fortress Energy (NFE) க்கு விற்பனை செய்தமை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்படாவிட்டால், சீன மின்சார உற்பத்தியாளர்கள், மின்சாரத்துறையில் முதலிட முன்வருவார்கள் என்றும் கொஹன குறிப்பிட்டுள்ளார்.



