மட்டக்களப்பில் போராட்டத்தில் குதித்த இலங்கை பட்டதாரிகள் சங்கம்
ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று மட்டக்களப்பில் போராட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த பேரணியானது திருமலை வீதி சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
மட்டக்களப்பில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் 200இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு குறித்த போராட்த்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஐந்து வருட அநீதிக்கு நியாயம் வேண்டும். போட்டிப் பரீட்சை மட்டும்தான் தகுதியா? அரசே பாடசாலையில் ஆசிரியர் பணி புரிந்து பல மாற்றங்களைக் கொண்டு வந்த எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கு, மாணவர்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்ட எங்களை ஏமாற்றாதே போன்ற கோசங்களுடன் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் 1400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





