அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிம், சமுர்த்தி மற்றும் வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் செயயற்பாடுகளுக்கே வரி வருமானம் போதுமானதாக உள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த சவாலான ஆண்டில் வருமானம் மற்றும் செலவுகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும்.
அதில் 1265 பில்லியன் ரூபா அதாவது 72% அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. மேலும், சமுர்த்தி உட்பட வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 506 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
வரி வருமானம் இந்த இரண்டு செயல்பாடுகளுக்கு செலவிடவே போதுமானதாக உள்ளது. மேலும், நாம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டியை செலுத்த 1,065 பில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டும். மேலும், 715 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்காக கடன் பெற்று செலவிடப்பட்டுள்ளது.
மேலதிக இருப்பு எதுவும் இல்லை
இலங்கையின் வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர் 05 வருடங்களைத் தவிர முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பு எதுவும் இருக்கவில்லை.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 1,550 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. சுங்கத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்க வரிகள் மூலம் 922 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மதுவரித் திணைக்களம் 169 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மோட்டார் வாகன திணைக்களம் 20 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது.
219 பில்லியன் ரூபா வரி அல்லாத வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 16 பில்லியன் ரூபா நன்கொடைகளாகப் பெறப்பட்டுள்ளன. பல்வேறு வைப்புத்தொகைகள் மூலம் 303 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், மக்களிடமிருந்தும் மற்றும் ஏனைய அனைத்து வகையிலும் 3,201 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் திறைசேரி பெற்றுள்ளது.
அரச ஊழியர் சம்பளம், நலன்புரி மற்றும் நிவாரணம்
2022 ஆம் ஆண்டை விட அதீத முன்னேற்றம் என்பதைக் கூற வேண்டும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் 1,000 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதைவிட வேகமாக செலவுகள் அதிகரித்துள்ளன.
அரச ஊழியர் சம்பளம், நலன்புரி மற்றும் நிவாரணம் உள்ளிட்ட விடயங்களுக்காக 2,160 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2,263 பில்லியன் ரூபா வட்டி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், அரசாங்கம் நாளாந்த செலவுகளுக்காக 4,394 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது.
அந்த ஆண்டில் அரச வருமானம் 3,201 பில்லியன் ரூபா. எனவே, 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு போதுமான வருமானம் பெறப்படவில்லை.
ஆனால் 2023ஆம் ஆண்டில் 7,727 பில்லியன் ரூபா திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மூலதனச் செலவுகள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் 8,898 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. திறைசேரியிலிருந்து 13,292 பில்லியன் ரூபா வெளியே சென்றுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு கிடைத்த நிதியின் அளவு 3,201 பில்லியன் ரூபா மாத்திரமே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |