அரச ஊழியர்களின் சம்பளம் தாமதமாகலாம்! ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் அமைச்சர் தகவல்
தற்போது அத்தியாவசிய செலவினங்களுக்காக பணத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்தப் புறம்பான செயல்களுக்கும் பணத்தைச் செலவழிக்கும் திறன் திறைசேரிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்தை விட இரண்டு மடங்கு செலவு
தேர்தல் அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் செலவழிக்கப்பட்டால், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி மற்றும் பிற மானியங்களும் தாமதமாக வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது வரை தேசிய திறைசேரியின் செலவு நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும்,தற்போதைய நிலைமையை சமாளிக்காவிட்டால் மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.