மூடப்படும் அபாயத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:வெளியாகியுள்ள காரணம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் சார்ந்த பல பிரச்சினைகள் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதற்கமைய பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீதம் என்ற ஒதுக்கீடு பற்றாக்குறையே இதற்கான காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் வட்டி வீதம் அதிகரிப்பு
இதேவேளை வங்கிகளின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதிகரித்த கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீதம் என்ற ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண முறை
இதேபோன்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுறவு (CPC) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக 400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள, முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மூடப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்
இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறுகையில்,“எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுநாளுக்கான எரிபொருளை பெறுவதற்கு முதல் நாள் இரவு 9:30 மணிக்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வருமானத்தை நம்பி பணம் செலுத்துவது அவர்களுக்கு கடினமாக உள்ளது.
முதல் நாள் இரவு 9:30 மணிக்குள் அல்லது அதற்கு முன் பணம் செலுத்தப்படாவிட்டால், அடுத்த நாள் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்கள் (CPSTL) எரிபொருளை வழங்காது. இதன் விளைவாக, சில நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன.
அத்துடன் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்பட்டமைக்கான காரணம், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த முடியவில்லை என்பதாகும்.”என்று தெரிவித்திருந்தார்.