விமானங்களுக்கான எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளது
இலங்கையில் விமானங்களுக்கான எரிபொருள் கையிருப்பில் மீண்டும் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாளொன்றுக்கு 13லட்சம் லீற்றர் விமான எரிபொருள் தேவைப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் தினமொன்றுக்கு 14 லட்சம் ஜெட் எரிபொருள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைக்கு 10 அல்லது 15 நாட்களுக்கான விமான எரிபொருள் மட்டுமே தற்போதைக்கு கையிருப்பில் உள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில்
மேலதிக விமான எரிபொருள் கொள்வனவிற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் போதுமானதாக இல்லை அதே நேரம் ஶ்ரீலங்கன் விமான சேவை கடந்த நான்கு ஆண்டுகளாக நூறு கோடிக்கும் அதிகமான எரிபொருள் கட்டண நிலுவையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.
இவ்வாறான பாரிய நிலுவைத் தொகை காரணமாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணம் என்று சகல விடயங்களிலும் பெரும் தொகை நிலுவைக் கட்டணத்தை வைத்துக் கொண்டுள்ள ஶ்ரீ லங்கன் விமான சேவை இந்நாட்டின் அரச நிறுவனங்களில் மிகப் பெரும் நட்டத்தை சந்தித்துள்ள முக்கிய நிறுவனமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.