விமான எரிபொருள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை:நிமல் சிறிபால டி சில்வா
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் மற்றும் புறப்பட்டுச் செல்லும் விமானங்களுக்கு தினமும் தேவைப்படும் விமான எரிபொருள் (ஜெட் எரிபொருள்) போதுமான அளவில் கையிருப்பில் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
10 முதல் 15 நாட்களுக்கான எரிபொருளே கையிருப்பில்
தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் விமான எரிபொருள் 10 முதல் 15 நாட்களுக்கு போதுமான அளவில் மாத்திரமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியம் மற்றும் அதன் நடவடிக்கைகளை பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஜெட் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்காக நிரந்தரமான உரிய வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 13 லட்சம் லீட்டர் விமான எரிபொருள் தேவை
விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு தினமும் சுமார் 13 லட்சம் லீட்டர் விமான எரிபொருள் தேவைப்படுகிறது. அடுத்த மாதத்தில் இருந்து சுற்றுலா காலம் ஆரம்பிக்க உள்ளதால், தினமும் 14 லட்சம் லீட்டர் விமான எரிபொருள் தேவைப்படும்.
விமான எரிபொருளை தடையின்றி தொடர்ந்தும் விநியோகிக்கும் பொறுப்பு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குரியது. விமான எரிபொருள் வழங்கப்படும் என்ற உறுதிப்பாட்டை விமான நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.