உச்சமடையும் எரிபொருள் நெருக்கடி நிலை! அரசாங்கத்தின் தொடர் முயற்சி பலனளிக்குமா..
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை கோரத் தாண்டவமாடி வருகின்றது. எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும், அத்தியாவசி உணவுப் பொருட்களும் பொதுமக்கள் வரிசையில் நின்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை உணவு என்பதே தற்போது பலருக்கு எட்டாக் கணியாக இருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.
ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை
ஒரு நாள் பணிக்குச் செல்வதற்காக எரிபொருள் வரிசையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய கடும் துயரமான நிலையை தற்போது எதிர்கொண்டு வருகின்றோம்.
அதைவிட துயர் என்னவென்றால், எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தொடர் முயற்சி
இவ்வாறான நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருவதுடன், அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் சார் உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றன.
அத்துடன், எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்யாவை நோக்கி இரண்டு அமைச்சர்கள் செல்வதாக எரிசக்தித் துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்திருந்தார்.
அத்துடன், எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே, இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவராக இருந்த கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சமயத்தில், எரிபொருள் வரிசையில் காத்திருப்பதில் பயன் இல்லை என்றும், எரிபொருள் இல்லை என்றும் பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எரிபொருள் வரிசையில் காத்திருந்து காத்திருந்து அரசு மீதான பொதுமக்களின் அதிருப்தி நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
அரசாங்கம் ரஷ்யாவை தற்போது நாடியிருக்கும் நிலையில், இந்த முயற்சி சாத்தியமாகுமா இல்லையா என்ற அதிருப்தி நிலையே பொதுமக்களிடம் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.