பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக அதிக முறைப்பாடுகள்
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக அதிகளவிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் கூடுதல் எண்ணிக்கையிலானவை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு எதிரானவை என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஐ.பதிநாயக்க தெரிவித்துள்ளார்.
1080 முறைப்பாடுகள்
அண்மைய நாட்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சுமார் 1080 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கூடுதல் கட்டணம் அறவீடு செய்தல், கட்டணம் அறவீடு செய்து தொழில் வழங்காமை, வெளிநாடு சென்றதும் உரிய முறையில் தொழில் வழங்காமை இதனால் நாடு திரும்ப நேரிட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரங்கள் ரத்து
கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இம்முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் மூன்று கோடியே நாற்பது லட்சம் ரூபா நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை விசாரணை செய்து 13 முகவர் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 205 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.