இந்திய இழுவை மடி படகுகளால் மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு - வர்ணகுலசிங்கம்
உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகண மீனவ அமைப்பு பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை என்றும், இந்தியன் இழுவை மடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து மீன் உறப்பத்தியை இல்லாமல் செய்வதாகவும் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத சுருக்கு வலை தொழில், டைனமெட் மீன்பிடி, மற்றும் பிற மாவட்ட மீனவர்களின் வாடி அமைத்து கடல் அட்டை பிடிக்கும் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்க படுவதாகவும், தற்போது மீனவர்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஒரு நாளைக்கு ஒரு மீனவனுக்கு 30 லீட்டர் தொடக்கம் 50 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் ஆனால் ஒரு கிழமைக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெயை கூட பெற்றுக் கொள்ள முடியாதுள்ளாதகவும் அவர் குறிப்பிட்டார்.