வெளிநாடுகளில் வாழும் சொகுசு வாழ்க்கை இலங்கை உயர்ஸ்தானிகர்கள்
இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில், வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகள் அதிக செலவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடுகளில் தூதுவர்களாக செல்லும் சிரேஷ்ட வெளிநாட்டுச் சேவை உத்தியோகத்தர்கள், அந்நாடுகளில் தங்களுடைய வசிப்பிடங்களுக்கு அதிக விலையிலான சொகுசு வீடுகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது பாரிய நெருக்கடியை ஏற்படு்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தூதர அதிகாரிகள்
பதவி காலம் நிறைவடைந்த பின்னர் வசிப்பதற்கு புதிய வீடுகளை பெற்றுக்கொள்ளும் போது குறைந்த விலையில் வீடுகளை பெறுமாறு வெளிவிவகார அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் அதிக விலையில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சில நாடுகளில், வெளிவிவகார அமைச்சு அத்தகைய வீட்டிற்காக ஒரு அதிகாரிக்கு 50 முதல் 70 லட்சம் ரூபாய் வரையில் மாதம் செலவிட வேண்டிய நிலை வெளிவிவகார அமைச்சிற்கு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
சொகுசு வாழ்க்கை
இது தவிர ஒவ்வொரு சிரேஷ்ட தூதுவருக்கும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் இதர செலவுகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
உலகின் பணக்கார நாடுகளின் தூதரக அதிகாரிகள் கூட தங்களுடைய குடியிருப்புக்கு குறைந்த விலையிலான வீடுகளை தெரிவு செய்கின்ற போது இலங்கை அதிகாரிகளின் சொகுசு வாழ்க்கை பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதுதவிர, சில வெளிநாட்டுச் சேவை அதிகாரிகள் போலி விலை பட்டியல்களை சமர்ப்பித்து ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
