தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயம் செய்ய அனுமதிக்கும், பிரசார நிதி வரைவு யோசனை, அடுத்த வாரம் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்தின்படி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட வரம்பிற்கு மேல் செலவு செய்யும் எந்தவொரு வேட்பாளரும், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துக்கும் சிறைத்தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்;.
நாடாளுமன்றுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் ஆசனத்தையும் இழக்க நேரிடும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை
ஜனாதிபதி, நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். இந்த யோசனையின்படி, வேட்பாளர்கள் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணைக்குழுவிடம் தாங்கள் நிதியை பெறும் வழி, நன்கொடையாளர்கள் யார் மற்றும் ஒவ்வொரு நன்கொடையாளரும் தங்கள் பிரசாரத்திற்கு எவ்வளவு பங்களித்தார்கள் என்பதை விபரிக்கும் அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிதிகள், தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட செலவின வரம்பைத் தாண்டக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நன்கொடைகளை ஏற்றுக்கொள்ள தடை
புதிய சட்டத்தின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அநாமதேய நன்கொடையாளர்கள், 50வீத அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் இலங்கையில் நிறுவப்பட்ட அரசு நிறுவனங்கள், வெளிநாடுகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வேட்பாளர்கள் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது.
தேர்தலில் வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்வதில் குற்றங்களின்; போக்கு
காணப்படுவதாகவும், எனவே புதிய சட்டங்கள் அத்தகைய நிதியுதவியை கட்டுப்படுத்த
உதவும் எனவும் அமைச்சர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.