எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றம்
இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு இறப்பர் வர்த்தகர் சங்கத்தின் 104ஆவது வருடாந்த பொதுக்கூட்டமானது நேற்றைய தினம் (22.07.2023) இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்கள்
மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் மாற்றியமைக்கப் போவதில்லை.
வெளிப்படைத்தன்மையை உருவாக்க ஊழல் ஒழிப்புச் சட்டம், மத்திய வங்கி சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்காக புதிய மத்திய வங்கிச் சட்டம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.
இதனூடாக பொருளாதாரம் மிகவும் நம்பகமான திசையில் நகர்ந்து செல்கின்றமை உறுதியாகிறது.
இதன் விளைவாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் இலங்கை 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனினும் இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெருக்கடியின் இரண்டாம் கட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான ஒப்பந்தங்களில் குறைந்தது 39% இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |