ஏதிலிகளாக மேலும் அறுவர் தமிழகத்தில் தஞ்சம்! (Video)
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் ஏதிலிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் இன்று (17.10.2022) காலை தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் ஏதிலிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர்
இந்நிலையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன், கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் தீடை இலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து இராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ஏதிலிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.