உழைத்து வாழ போராடும் மாற்றுத்திறனாளி ஒருவரின் உருக்கமான கோரிக்கை (Photos)
சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதற்கான உழைப்பையும் செலுத்த தயாராக இருக்கும் ஆயிரமாயிரம் மாற்றுத்திறனாளிகள் எம்மத்தில் இருக்கின்றனர்.
அத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கானத் தற்போதைய தேவை, சுய உழைப்பின் மூலம் வாழ விரும்பும் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் சமவுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
எது அபிவிருத்தி
பதுளை - அட்டாம்பிட்டிய இரண்டாம் பிரிவுத் தோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளில் ஒருவரே நடேசன் சிவச்சந்திரன்.
இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் வெளிமடை நகரில் அப்போதைய வெளிமடை பிரதேச சபை தவிசாளரிடம் முறையே அனுமதிபெற்று அதிஷ்டலாப சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நகரை அபிவிருத்தி செய்வதற்காக வீதியோர வியாபாரிகளின் கடைகள் மற்றும் லொத்தர் விற்பனையாளர்களின் கூடாரங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
அதன்போது நகரின் அபிவிருத்தி பணிகள் நிறைவுற்றதும் லொத்தர் கூடாரங்களை உரிய இடங்களில் வைத்து விற்பனை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் வாய்மூல ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
நகரின் அபிவிருத்தி வேலைகள் நிறைவுற்று ஏனைய கடை வியாபாரிகள் தத்தமது கூடாரங்களை வைத்து வியாபாரம் செய்கின்ற போதிலும் மாற்று மாற்றுத்திறனாளியான தமது கூடாரத்தை வைத்து அதிஷ்டலாப சீட்டுகளை விற்பனை செய்திட அதிகாரிகள் அனுமதிக்கவேயில்லை என குறித்த மாற்றுத்திறனாளி விசனம் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியின் கோரிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “எனது கூடாரங்கள் அகற்றப்பட்டதன் பின்னர், வருமான வழிகள் இன்றி வெளிமடை சூப்பர்மார்கட் நுழைவாயிலருகே நின்று அதிஷ்டலாப சீட்டு விற்பனையை மேற்கொண்டு வந்தேன்.
எனது நிலையறிந்த ஒருசிலர் கதிரைகளை பெற்று தந்தனர். அதனை பாவித்து விற்பனையில் ஈடுபட்டு வந்தேன்.
சுமார் 50 ஆயிரம் பெறுமதியான எனது கூடாரத்தை அப்புறப்படுத்தி பிரதேச சபையினால் மீள கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்படவே இல்லை.
பின்னர், கடன்பெற்று சுமார் 35 ஆயிரம் ரூபா செலவில் கூடாரம் ஒன்றை செய்து கடந்த 17.11.2022 அன்று சூப்பர்மார்கட் தொகுதி வெளிப்புற மதிலோரம் வைத்து வியாபாரம் செய்யத்தொடங்கினேன்.
இந்நிலையில், கடந்த 23.11.2022 அன்று மீண்டும் எனது கூடாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆனால் நகருக்குள் ஏனைய கூடாரங்கள் அனைத்தும் இருக்க எனக்கு மட்டுமே இப்படியான அநீதிகள் நடைபெருகின்றது.
எனவே சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகசேவை திணைக்கள உயர் அதிகாரிகள் முன்வந்து எனக்கொரு நல்ல தீர்வினை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலும் உழைத்து வாழ போராடி கொண்டிருக்கும் இவரை போன்ற மாற்று திறனாளிகளின் கண்ணீருக்கு பதில் தான் என்ன..!