இலங்கைக்கு கிடைக்கும் 70 கோடி அமெரிக்க டொலர்கள் - மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
சமூக நலன்புரி திட்ட நிதி உட்பட அரசாங்கத்தின் எதிர்கால வரவு செலவுத்திட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான 70 கோடி டொலர் நிதியை இலங்கைக்கு வழங்குவது குறித்து கருத்திற்கொள்ள உலக வங்கி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் அதன் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
இலங்கைக்கு கிடைக்கும் இந்த நிதியின் மூலம் 20 கோடி ரூபா தொகையை சமூக நலன்புரி கொடுப்பனவுக்காக செலவிட எதிர்பார்த்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த கடன் தொகையின் முதல் பகுதி அடுத்த மாதமும் எஞ்சிய தொகை இந்த வருட நிறைவுப்பகுதிக்குள்ளும் இலங்கைக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக நலன்புரி கொடுப்பனவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் இந்த புதிய சமூக நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தை முறையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேசிய வேலைத்திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்படி சமூர்த்தி, வயோதிபர், சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு அரசாங்கம் இந்த நிதியுதவியை வழங்குகிறது. இந்த கொடுப்பனவை பெற தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்காக 22 நிர்ணயங்கள் மற்றும் புள்ளிவழங்கும் முறையுடன்கூடிய செயலி ஒன்றை குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் உருவாக்கியுள்ளது. இதன்போது பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும்.
மூன்று வருட வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும். அதன்பின்னர் சமூகத்தில் ஊக்குவிக்கப்பட்ட அவர்கள் பயன்பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சுயமான முன்னேறக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படுவார்கள்.
இலங்கைக்கு முதலில் 20 கோடி டொலர்
உலக வங்கி இந்த செயற்றிட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு முதலில் 20 கோடி டொலர்களையும் அடுத்ததாக 50 கோடி டொலர்களையும் வழங்கவுள்ளது.
இந்த கடன் வசதியை பெற்று இந்த வருடத்தின் அரச
செலவினங்களையும் ஏனைய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.