இலங்கையின் பொருளாதார பேரிடர்: தமிழர்கள் கடந்து வந்த பாதை
இலங்கை என்றுமில்லாதளவிற்குப் பொருளாதாரப் பேரிடரை எதிர்கொண்டிருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் அரசும்; சரி, இந்த அரசை உருவாக்கிய மக்களும் சரி இதன் விளைவை அதிகமாக உணர்கின்றனர்.
விந்தை என்னவெனில் இந்தப் பிரச்சினைக்கு யாரிடமும் தீர்வில்லை. இந்நிலமை எப்போது, எப்படி சீர்செய்யப்படும் என்பது பற்றிய முன்மொழிவுகள் கூட இல்லை.
இப்போதைக்கு அரசிடம் இருக்கும் ஒரே தீர்வு கடன்பெறுவது மாத்திரம்தான். அண்டை நாடான இந்தியா, சீனா, பங்களாதேஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா எனத் தொடங்கி நைஜீரியா வரைக்கும் கடன் வாங்கியாயிற்று. இனியும் இந்த நாட்டை நடத்துவதற்குக் கடன் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்ற கடனை அடைக்கக்கூட கடன்தான் கோரப்படுகிறது. சாதாரண குடிமகன் ஒருவர் எவ்வித உழைப்பிற்கும் போகாது கடன் வாங்கி வாழ்வு நடத்துவராயின் அவர் தன்வாழ்வை தற்கொலையிலேயே முடிக்க வேண்டிவரும். இலங்கையும் தற்போது அந்நிலைமைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கின்றது.
அதாவது இலங்கையின் தற்போதைய ராஜபக்ச குடும்ப ஆட்சியை அமைத்த தரப்பினரே இந்நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எப்போது அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படாத குறித்த இனக்குழுவினர் வரலாற்றில் செய்த நூற்றியொராவது தவறுக்கான விளைவைத் தாம் மட்டும் அனுபவிக்காது இலங்கைத்தீவில் வாழ்கின்ற ஏனைய இனத்தவர்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் மீது ஏவிவிட்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடி என்கிற ஏவல் தமிழ் மக்களைப் பெரிதளவில் பாதித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்தக் நெருக்கடிகளுக்கும், கஸ்ரங்களுக்கும் நன்று பரீட்சயப்பட்டு, அழிவின் ஒட்டுமொத்த விளைவுகளையும் கண்டு கடந்து நிமிர்ந்தவர்களாகத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
அதாவது இந்த மாதிரியான பொருளாதாரப் பேரழிவுகளை முதன்முதலில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்களே இலங்கைத் தீவின் பெரும்பான்மையினர்தான்.
இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் சென்ற அரசானது, தனிச் சிங்கள அரசாக மாற்றப்பட்டது. அவ்வேளையில் பொருளாதார பலத்திலிலும், கல்வி அறிவிலும் மேம்பட்டு விளங்கிய தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குப் பெரும் சவாலாக இருந்தனர்.
தனிச் சிங்கள அரசுருவாக்கத்திற்குப் பெருந்தடையாக இருந்தனர். இதனால் தமிழர்களை இத்தீவில் இருந்தே அகற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரலைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டது.
மொழி உரிமை நிராகரிப்பு, கல்வி தரப்படுத்தல், கலவரங்கள், கொள்ளையடிப்புக்கள், ஆக்கிரமிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள் எனத் தொடங்கியவர்கள் பெரும் தமிழினப் படுகொலையை இறுதி ஆயுதமாக கையிலெடுத்தனர்.
அதற்கு வலுச்சேர்ப்பதற்காக பொருளாதாரத் தடை என்ற கருவியை சிங்கள மக்களும், அவர்தம் அரசுகளும் நடைமுறைப்படுத்தின. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரா நாயக்கா குமாரதுங்க இந்தப் பொறியை அறிமுகப்படுத்தினார்.
இலங்கை தீவில் தமிழர் சுயர்நிர்ணய உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான தடையே இந்தப் பொருளாதாரத் தடை என்ற பொறியில் உள்ளடக்கப்பட்டது.
மக்களது அன்றாட தேவைகளுக்கு மிக அத்தியாவசியப் பொருட்களான குழந்தைகளுக்கான பால்மா, மருந்துகள், எரிபொருள், உரம், பற்றரி, உணவுப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள், போன்றவற்றுக்குத் பல வருடங்கள் தடைவிதிக்கப்பட்டன.
அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து ஓமந்தை, பள்ளமடு ஆகிய இடங்கள் ஊடாக மாத்திரமே புலிகளின் கட்டுபாட்டுப் பகுதிகளுக்குள் நுழையும் சோதனைச் சாவடிகள் இருந்தன.
இந்த இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் ஊடாக மேற்சொன்னவாறு தடைசெய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை தெரிந்தும் தெரியாமலும் எடுத்து வந்ததன் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் தொகைக்கு எந்தப் பதிவுகளும் இல்லை.
இவ்வாறாதொரு குரூரமான பொருளாதாரத் தடையை தமிழர்கள் எதிர்கொண்ட போதிலும், அதனை இலகுவாக சமாளித்து மீண்டனர்.
அரசு எந்தப் பொருளையெல்லாம் தடைசெய்ததோ, அதற்கு மாற்றீடான இன்னொரு பொருளை தமிழர் கட்டுப்பாட்டுப் பகுதியில் கிடைக்கும் வளங்களைக் கொண்டே கண்டுபிடித்துக்கொண்டனர். அதனை நாளாந்த வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் கொண்டனர்.
சில காலம் தெற்கிலிருந்து அரிசி, கோதுமை மாவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது உணவுப் பஞ்சம் ஏற்படும் என அச்சுறுத்தப்பட்டபோதிலும் அது இடம்பெறவில்லை. கிடைத்த அத்தனை போகங்களிலும் விவசாயிகள் நெல் விளைவித்தலில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நெல் விதைப்பது இரண்டு பிரதான போகங்களே ஆயினும், தடை காலப்பகுதியில், வன்னில் மூன்று போகங்கள் கூட நெல் உற்பத்தி இடம்பெற்றன.
முத்தையன்கட்டு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், கள்ளியடி, கணுக்கேணி பக்கங்களில் இதற்குப் பல கதைகள் உண்டு. இங்கிருந்த குளங்களை விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவினரின் உதவியோடு மக்களும் இணைந்து புனரமைத்து நீர் நிலைகளைக் காப்பாற்றினர். எனவே வரப்புய நெல்லுயர்ந்தது. அரசி விலை 12 ரூபாய்க்கு மேற்செல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் அல்லாத குடும்பத்தினர் கூலி வேலைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு சம்பளத்திற்குப் பதிலாக நெல் வழங்கப்பட்டது. பச்சையரிசி கஞ்சியும், சுட்ட சூடைக் கருவாட்டும் அனேக வீடுகளில் காலை உணவாக இருந்தது. மதியம் அதே சோற்றில் முத்தையன்கட்டு குளத்திலோ, தண்ணிமுறிப்பு குளத்திலோ பிடிக்கப்பட்ட யப்பான் மீன் கறி அருமருந்தான உணவாக இருந்தது.
கொஞ்சம் வசதியானவர்கள் கடல் உணவைத் தாராளமாகப் பெற்றுக்கொண்டனர். ஏனெனில் ஒரு கிலோ சூடை மீனின் விலை இரண்டு ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை சந்தையில் கிடைத்தது. எனவே உணவுக்குப் பஞ்சமிருக்கவில்லை.
தமிழர்கள் பசி தாங்காது தங்களிடம் சரணடைவர் என அரசு போட்ட பொறி புஷ;வாணமானது. பசளை, உரம் இல்லாது விளைச்சல் எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பானது.
அதற்கும் ஒரு மாற்று இருந்தது. வேம்பிலிருந்து விழும் பழங்களை பொறுக்கி, அதிலிருந்து விதைகளைப் பெற்று அரைத்து மேலும் சில இயற்கை நோயளிப்பு விதைகளை சேர்த்து ஒரு வித கரைசலை பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியிருந்தது. அது நெற்பயிர்களில் ஏற்படும் நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தியது.
அதேபோல வேப்பம் இலை, வாழை தடல் போன்றவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட உரம் 'பயிரமுது' என்ற பெயரோடு கடைகளில் கிடைத்தது.
இயற்கைக்கு மனங்கோணாமல் பார்த்துக்கொண்டால், அது நம்மை சரியாகக் கவனித்துக்கொள்ளும் என்பதற்கு இணங்க, மழைப்பொழிவிலும் பஞ்சம் ஏற்படவில்லை.
எரிபொருளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடையையும் மக்கள் இலகுவாகக் கடந்தனர். அனைவர் வீடுகளிலும் சைக்கிள்கள் இருந்தன.
வடக்கு, கிழக்கின் எப்பாகத்திற்கும் குடும்பம் குடும்பமாக சைக்கிளில் பயணித்தனர். இடப்பெயர்வுகள் தொடக்கம் இல்லற வாழ்வின் தொடக்கம் வரையில் சைக்கிள் பிரதான உலாவூர்தியாக வலம் வந்தது. வசதி படைத்தவர்கள் வீடுகளில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் இருந்தன.
அவற்றை பெற்றோலுக்குப் பதில் மண்ணெண்னெயில் இயங்குவதற்கான பொறிமுறையையும் தமிழர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
இன்று வழக்கிலிருந்து அருகிவிட்ட 'சூப்பி' எனப்பட்ட சிறு குப்பி பெற்றோலை கார்பரேட்டருக்குள் அனுப்பி மோட்டார் வாகனத்தை 'ஸ்ராட்' செய்துவிட்டு, மண்ணெண்ணெயில் ஓடவிட்டனர்.
விவசாய நடவடிக்கைகளின்போது நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு கார்பரேற்றருக்கு சற்றுப் புகை காட்டி 'ஸ்ராட்' செய்தனர். உடல் உழைப்பு பலமாக இருந்தமையினால் நோய் நொடிகள் தொற்றுவது குறைவாக இருந்தது.
சில 'சீசன்களில்' மலேரியா, கொலரா போன்ற நோய்கள் பரவியபோது வேப்பம் பட்டையை அவித்து ஒரு 'ரம்ளர்' பருகினர். அதனோடு பறந்த காய்ச்சல் பல வருடங்களுக்கு அவ்வுடம்பை தொட்டும்பார்க்கவில்லை என்பது நாடறிந்த செய்தி.
இப்படித்தான் தமிழர்கள் இலங்கை அரசு ஏவிய பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டனர். இனிய நினைவுகளாக இருக்கும் அந்தக் கால வாழ்க்கை முறையானது சிரமமானதாக எப்போதும் இருந்ததில்லை.
இங்கு தமிழர்களது வாழ்வுமுறையின் மிகச் சொற்பமான பகுதியே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தமிழர் எதிர்கொண்ட இடர்களின் வரலாறு பெருங்கடல்.
நிலமும், வளமும் தந்த பலத்தினால் தமிழர்கள் எவ்விடர்களையும் எதிர்கொண்டனர். அந்த நெஞ்சுரமே இப்போதும் இந்தப் பொருளாதாரத் தடையை வெற்றிகரமாகத் தமிழர்கள் எதிர்கொள்வதற்கு வழியமைத்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
