திருகோணமலையில் லங்கா சதொச நிறுவனத்தில் குவிந்த மக்கள் (VIDEO)
லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் அரிசி விநியோகிக்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தில் இன்று (22) காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசி கொள்வனவில் ஈடுபட்டதாகவும் அவ்வாறு அரிசி கொள்வனவு செய்யப்படும் போது லங்கா சதொச நிறுவனம் பல நிபந்தனைகளை முன்வைப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த லங்கா சதொச நிறுவனத்தில் ஒருவருக்கு மூன்று வகையான அரிசி வகைகளில் ஐந்து கிலோ கிராம் வீதம் அரிசி வழங்கப்படுவதாகவும், அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் அரிசியினை பெறுவதற்கு ரூபா 10 பெருமதியான பை ஒன்று கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தினால் சலுகை விலையில் அரிசி வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள போதிலும் குறித்த சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவு செய்ததன் பின்னர் ஏனைய வேறு பொருட்களும் கட்டாயமாக கொள்வனவு செய்யப்படல் வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இருப்பினும் குறித்த லங்கா சதொச நிறுவனத்தில் அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய முறையில் இல்லையெனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விலைவாசி உயர்வினை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு அரச நிறுவனம் ஒன்றில் அரிசியுடன் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யுமாறு கட்டாயப்படுத்துவது வாடிக்கையாளர்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயல் எனவும் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான தனியார் வர்த்தக நிலையங்களில் இவ்வாறு வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வேறு சில பொருட்களை வாங்குமாறு வர்த்தகர்கள் கட்டாயப்படுத்துவதாக வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளினால் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இவ்வாறு அரசு நிறுவனத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



