நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் - அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும்
பலவீனங்களை கண்டறிந்து மீண்டும் பலப்படுத்துவதன் மூலம் இலங்கை பொருளாதார ரீதியாக முன்வர முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ருவன்வெல்ல பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற சப்ரகமுவ மாகாண பாடசாலை விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் (11) கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த வீழ்ச்சியின் ஆழத்தை குறைக்கவும், சாத்தியமான சேதத்தை குறைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். நாடு எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் உள்ளது.
இவ்வாறான நிலையில் இளைஞர்களாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதல்ல, ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு முன்பு 2009-ல் இதே போன்ற பொருளாதார நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம்.
மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடி
ஒரு பக்கம் போரை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டோம்' என்று அமைச்சர் கூறினார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதற்கான தீர்மானம் குறித்தும் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதற்காக நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.