பொருளாதார நெருக்கடியால் பின் நோக்கி நகரும் மக்கள் வாழ்க்கை (Video)
“சான் ஏற முழம் சறுக்குவது” போன்றுதான் தற்போதைய நிலையில் மக்களின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இன்னல்களுக்குள் சுழன்று தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் மீண்டும் பொருளாதாரச் சிக்கலுக்குள் அகப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆசை ஆசையாக வாங்கிய மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த முடியாத நிலையில் பழையபடி துவிச்சக்கர வண்டிகளையே பயன்படுத்த மக்கள் தொடங்கிவிட்டனர்.
இதனால் விரைவாக கடமைகளைச் செய்ய முடியாது தொழிலுக்கும், குடும்ப கடமைகளை மேற்கொள்வதற்கும். மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் எமது வாழ்வில் இது பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என்பதை நினைத்து பெரும் வேதனையாகவுள்ளது.
தற்போதை நிலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு, உரம், உள்ளிட்ட பொருட்கள் இல்லாமலும், மருந்துகள், அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் அதிக விலையேற்றத்தாலும் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முடியாத நிலையிலும், மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
மக்கள் கடந்த காலத்தில் கால் நடையாகவும், மாடு மற்றும், குதிரை, வண்டிகளிலும், தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வந்திருந்தனர் பின்னர், துவிச்சக்கர வண்டி அறிமுகமானதும் அதனைப் பயன்படுத்தி அதற்கே பழக்கப்பட்டு வந்தனர்.
அதேபோன்று இயற்கை உணவுகளையும், உண்டு வந்தனர், அப்போது மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்ற தொற்றா நோய்களோ, அல்லது ஏனைய வியாதிகளும், மிக மிக குறைவாகவே காணப்பட்டன.
காலம் செல்லச் செல்ல நவீன யுகத்தில் மோட்டார் சைக்கிள், கார், வேன், உள்ளிட்ட இயந்திர வாகனங்கள் அறிமுகமாகத் தொடங்கியதும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கையிலிருந்து இயந்திர மயமாக்கலுக்கும் மாறத் தொடங்கிவிட்டான்.
மின்சாரமின்றி, குப்பி விளக்குகளில் வாழ்ந்த மக்கள் மின்சாரத்திற்கும், விறகுகளைப் பயன்படுத்தி வந்த மக்கள், எரிவாயுவுக்கும், மாறிவிட்டனர், காலம் கரைபுரண்டோட மனிதனின் வாழ்வும் இயந்திர மயமானது.
ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மக்களின் வாழ்வை மீளவும் பின்நோக்கி நகர்த்துவதாகவே உள்ளது.