அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அல்லலுறும் கிளிநொச்சி மக்களின் வலிசுமந்த கதை (Video)
கிளிநொச்சி இராமநாதபுரம் பிரதேசத்திற்குட்பட்ட மாவடியம்மன் புதிய குடியிருப்பில் மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தொழில் வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் அதே நேரம் குடிநீர் வசதியின்மை, மின்சார வசதியின்மை,காட்டு யானைகளின் தொல்லை,கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்வாய்ப்பு இன்மை
இப் பிரதேசத்தில் இருந்து கூலி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் மிக நீண்ட தூரத்துக்கு செல்ல வேண்டும் அவ்வாறு சென்றாலும் கூலி வேலைகளும் இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.
குடிநீர் வசதியின்மை
அதுமட்டுமல்லாது இந்த பிரதேசத்தில் உள்ள மக்களினுடைய குடிநீர் தேவைகளுக்காக மூன்று குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் அதில் இரண்டு கிணறுகள் பழுதடைநிலையில் காணப்படுவதாகவும் ஒரே ஒரு கிணற்றில் இருந்து இங்கு வாழும் 38 குடும்பங்களும் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமக்கான குடிநீரை பெற்று வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனை விட தொன்னுாறு வீதமான குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடடுவசதிகளோ மின்சார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
இதனால் மின்சார வசதியின்றியும் தற்போது மண்ணெண்ணையின்றியும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் தொல்லை கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு இரவுகளையும் கழிக்க வேண்டி இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே மாவடியம்மன் புதிய குடியிருப்பில் வாழும் மக்களின் அவலநிலையை சுமந்து வருகின்றது இக் காணொளி