கரிம உர விவகாரம்: 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெற சீனாவுடன் பேச்சுவார்த்தை
சீனாவிடம் இருந்து கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளை வெளியுறவு அமைச்சு மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து சீன அரசாங்கத்துடனும் விடயத்துக்கு பொறுப்பான சீன நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப்பிரச்சினை தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கரிம உரம் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்தும் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நனோ உர கொள்முதல்
சீனாவின் கரிம உரத்துக்கான மாதிரி பரிசோதனை தோல்வியடைந்த நிலையில், இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீனாவின் கரிம உர நிறுவனத்திற்கு 6.2 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதனிடையே, இந்தியாவில் இருந்து நனோ உரம் கொள்முதல் செய்வது தொடர்பாக மற்றொரு கணக்காய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த நானோ உரத்திற்காக அதிக விலை கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கொள்முதல் குறித்த அறிக்கையை விவசாய அமைச்சு இறுதி செய்து எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |