ஜனாதிபதித் தேர்தலால் நாடு மீண்டும் ஸ்தம்பிதம் அடையும் நிலை : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
இலங்கை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக மீளும் செயற்பாடு, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஸ்தம்பிதமடைந்துவிடக்கூடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மீட்புப் பொதியால் தூண்டப்பட்ட கடுமையான சீர்திருத்தங்கள் காரணமாக, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.
ஆபத்தில் இருந்து நாடு இன்னும் வெளியேறவில்லை..
எனினும் நாடு முற்றிலும் ஆபத்தில் இருந்து வெளியேறவில்லை என்று நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
இந்தநிலையில், உள்நாட்டில், நிர்வாகத்தின் மாற்றத்துக்கு மத்தியிலும், தற்போதைய கொள்கைகளை முன்னோக்கிச் கொண்டு செல்வது முக்கியமானது.
எனினும் அதனை தாம் சவாலாகவே பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கன நடவடிக்கைகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தினால், தேர்தலுக்குப் பின்னர், இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என்றும் கடந்த மாதம் ஆசிய அபிவிருத்தி வங்கியும் எச்சரித்திருந்தது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் வெளிநாட்டு கடன் வழங்குநர்களும் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக 2024 மார்ச் மாத இறுதிக்குள் அதன் மிகப்பெரிய இருதரப்பு கடனாளியான சீனா உட்பட வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை இலங்கை எதிர்பார்த்திருந்தது. எனினும் இதுவரை எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |