கோட்டாபய ஆட்சியில் முறையற்ற வழிகளில் கிடைத்த டொலர்கள்: தலதா அத்துகோரல வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முறையற்ற வழிகளில் டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதை மாற்ற சரியான வழிமுறையொன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு வருமானம் பெரும் பங்காற்றியிருந்தது. தற்போது இந்த நிலை மாறி வருமானம் குறைந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காகவும் நாட்டின் செலவீனங்களை குறைப்பதற்காகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை.
தேவையான வழிமுறைகள் இல்லை
வெளிநாட்டில் வேலை செய்வோர் இலங்கைக்கு சரியான முறையில் பணம் அனுப்ப தேவையான எந்தவொரு வழிமுறையும் ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில் இருக்கவில்லை.
மேலும், வெளிநாட்டில் இருந்து வருமானங்களை பெற்றுக்கொள்ள சரியான வழிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு இல்லை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்காது சுற்றுலாத் துறையை எவ்வாறு ஜனாதிபதி மேம்படுத்த நினைக்கிறார் என்பது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை எவ்வாறு மீட்க போகிறார் என்பது குறித்தும் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.”என கூறியுள்ளார்.