அதிகரிக்கும் நாட்டின் டொலர் கையிருப்பு : நன்மைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு
இதுவரைக் காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாணய கையிருப்பு அதிகரிப்பு
வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணை பேச்சுவார்த்தையொன்றை ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கவுள்ளோம்.
அதன் பின்னர் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவடையும்.
எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் உலக அரங்கில் கடனை மீளச் செலுத்தக்கூடிய நாடு என்ற உறுதியைப் பெற்றுக்கொள்வோம். இதுவரைக் காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும்.
தற்போதும், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து வருகின்றன. மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவு செய்யும் பட்டசத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மீளக் கிடைக்கும். அதனால் எமது நாணயக் கையிருப்பும் அதிகரிக்கும்.
நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |