வலுப்பெற்றுள்ள இலங்கை ரூபா! முன்னோக்கி நகரும் நாட்டின் பொருளாதாரம்
பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த போது நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அவ்வாறான முடிவுகளால் தான் ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகின்றோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வற் வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளில் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது. நாட்டில் அந்நியச் செலாவணி இல்லை. தேவையான மருந்துகள், எரிபொருள் கொண்டு வர பணம் இல்லை.
கிடைக்கும் பணத்தை எரிபொருளுக்கு வழங்குவதா அல்லது உரத்திற்கு வழங்குவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
ஆனால் நாம் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை ஆரம்பித்தோம். அதன் ஊடாக உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு மருந்து மற்றும் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.
அத்தகைய கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வந்தோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தால், இந்தியாவிலிருந்து மருந்துகளைப் பெற முடிந்தது. மேலும், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட பணத்தால், உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது.
எவ்வாறாயினும், ஒரு நாடாக நாம் முதல் 6 மாதங்களை மிகவும் சிரமத்துடன் கடந்தோம். அதன் பிறகு நாடு படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
மக்கள் உங்களிடம் வந்து பணம் இல்லாமல் மருந்துகளைக் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்களுக்கு மருந்துகளை கொடுக்காமல் சாகச் சொல்வதா, நட்டத்தை அனுபவித்து மருந்து கொடுப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியேற்பட்டது.
நாம் அனைவரும் அந்தக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நாம் அனைவரும் சிரமப்பட்டு அந்த முடிவுகளை எடுத்ததால்தான் நாம் ஒரு நாடாக முன்னோக்கி வருகிறோம்.
மேலும் VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளால் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |