வீழ்ச்சியடையும் இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பினை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023ல் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 3% வீழ்ச்சியடையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 1.5 வீதத்தால் வளர்ச்சியடைய முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
சராசரியாக 5% வட்டி வீதம்
அங்கு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சர்வாட் ஜஹான், அரசு நிறுவனங்கள் இலாபம் ஈட்டாமல் அரசின் செலவினங்களை அதிகப்படுத்தியுள்ளன.
மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் செயல்முறையை நாயண நிதியத்தின் செயற்திட்டம் செயற்படுத்தப்படும் 04 ஆண்டுகளும் செயல்படுத்துவது அவசியமாகும்.
04 வருட காலத்திற்கு இலங்கைக்கு வழங்கவுள்ள 03 பில்லியன் டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகைக்கான வட்டி வீதமானது 2037 ஆம் ஆண்டு கடன் தொகையை மீள செலுத்தி நிறைவு செய்யும் வரை சராசரியாக 5% வட்டி வீதத்தில் பேணப்படும்.