நாடு கடந்த ஆண்டு இருந்த அதே நிலைக்குச் செல்லும்! அமைச்சர் வெளியிடும் தகவல்
நாட்டில் பொருளாதார முன்னேற்றம் அவசியமா அல்லது தேர்தல் அவசியமா என்பதைத் தீர்மானிக்கும் தருணம் தற்பொழுது காணப்படுகிறது என தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை டிஜிட்டல் கட்டமைப்பு_2030 இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு ஒக்டோபர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் உட்பட பல நிகழ்வுகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். உண்மையில், இந்த கோரிக்கை தொழில்துறையிலிருந்து வந்தது.
இலக்குகளை அடைந்து விட்டோம்
அமைச்சு என்ற வகையில், நாங்கள் இந்த நிகழ்வுகளை எளிதாக்க முயற்சிக்கிறோம். தற்போது தேர்தலை நடத்துவது அவசியமா அல்லது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியமா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
சுற்றுலாத் துறையை எடுத்துக் கொண்டால், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு நமது இலக்குகளை அடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கு 100,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இத்தருணத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டாலோ அல்லது போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் நடத்தப்பட்டாலோ நாடு கடந்த ஆண்டு இருந்த அதே நிலைக்குத் திரும்பும் என குறிப்பிட்டார்.