இலங்கையில் மட்டுமே உள்ள நடைமுறை - அரச ஊழியர்கள் யாருக்கு சுமை...!
சில மாதங்களுக்கு முன்பு "அரச ஊழியர்களே நாட்டுக்குப் பெரிய சுமை" என்றார் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச. அவரின் கூற்றினைப் பின்தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், "வேலைசெய்ய முடியாத அரச ஊழியர்கள் வீட்டுக்குப் போகலாம்" எனக் கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்களைப் பலரும் வழிமொழிகின்றனர்.
வீங்கிப் பெருத்த அரச ஊழியர்கள் நாட்டுக்கும், தமக்கும் பெருஞ்சுமை என்பதை பொதுமக்கள் கூடப் பரவலாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.
எரிபொருள் - எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவியவேளைகளில் வரிசைகளில் நின்ற பொதுமக்களும் இதனையேதான் சொன்னார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழியில் வசையாகவும், புகழாகவும் அரச ஊழியர்களின் முகத்துக்கு நேரேயே உமிழ்ந்து துப்பினர்.
14 பொதுமக்களுக்கு ஓர் அரச ஊழியர்
அரச ஊழியர்களில்லாவிட்டால் ஸ்தம்பித்துவிடக்கூடிய அரசும், மக்களும் இவ்வாறு அரச ஊழியர்கள் மீதான விமர்சனத்தையும் வெறுப்பையும் காட்டுவதற்குப் பிரதான காரணமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிதான்.
வறுமைக்கோட்டின் கீழிலிருந்து மேல்வர முடியாத நாடான இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் அரச ஊழியர்களாக இருக்கின்றனர். 14 பொதுமக்களுக்கு ஓர் அரச ஊழியர் என்கிற வீதத்தில் சேவைகளில் ஈடுபடுகின்றனர்.
குறைந்த வருமானம் பெறும் நாடொன்று இவ்வாறு வீங்கிப்பெருத்த அரச ஊழியர்களை வைத்திருக்கின்றமையே பொருளாதார வீழ்ச்சிக்கும், அபிவிருத்தியின் மந்தநிலைக்கும் காரணம் என உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் குறிப்பிடுகின்றன.
மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தின் பெரும் பகுதியை அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்திற்காக செலவிடும் அரசும், வரியைச் செலுத்தும் மக்களும் இதனால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக உணர்கின்றனர்.
இந்தப் பாதிப்பின் வெளிப்பாடுகளாகவே அரச ஊழியர்கள் மீதான விமர்சனங்கள், வசைவுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.
நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளெழுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைவதைத்தவிர வேறுவழியில்லை என இரண்டு வருடங்களுக்கு முன்பே வலியுறுத்தப்பட்டபோதிலும் தற்போதுதான் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் ஒரு முடிவுக்கு வரும் முன்பே ஏனைய நாடுகளின் அனுபவங்கள் - முன்னுதாரணங்களைப் பெற்று முற்கூட்டிய சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் பிரதான நடவடிக்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் ஆகும்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதாயின் அரச ஊழியர்களைக் குறைப்புச் செய்யவும், சம்பள அதிகரிப்பை நிறுத்தவும், புதிய நியமனங்களைத் தள்ளிவைக்கவும் வலியுறுத்தும் என்கிற எதிர்பார்ப்பில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக அரச ஊழியர்களுக்கான ஐந்து வருடங்களுக்கு சம்பளமற்ற விடுமுறையுடன் கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு, குறிப்பிட்ட காலத்திற்குத் தனியார் நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான ஊக்குவிப்பு போன்ற திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் மீதான விமர்சனம்
அரச ஊழியர்கள் மீதான இந்த விமர்சனங்களையும், ஆட்குறைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளையும் இப்போதுதானா மேற்கொள்ளவேண்டுமா என்கிற கேள்விக்குப் பதில், இல்லை என்றே வழங்கப்பட வேண்டும்.
அதற்குப் பல அரசியல், சமூக காரணங்கள் உள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொட்டு அரசியல்வாதிகளை வால்பிடித்தால் அரச உத்தியோகம் பெறலாம் என்கிற எண்ணம் ஒரு பொதுப்புத்தியாகவே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாகக் காட்டக்கூடிய பல சம்பவங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளின்போதுகூட இடம்பெற்றன. கதிரை ஆசைவெறிபிடித்த அரசியல்வாதிகள் இவ்வெண்ணத்தை தம் கட்சித் தொண்டர்களிடம் வளர்த்திருக்கின்றனர்.
தேர்தலில் தாம் வென்ற பிறகு எவ்வித தொழில்சார் தகுதிகளும் பாராது, தொழில் திறன்களை பரிசீலிக்காது அரச வேலைகளுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. சங்கிலித்தொடரான இந்நிகழ்வு தொடர்ந்தும் நிகழ்ந்திருக்கின்றன. இனியும் நிகழவிருக்கின்றன. எனவே அரச ஆளணிப் பெருக்கத்திற்குப் பிரதான காரணமே அரசியல்வாதிகள்தான்.
அதேபோல அரச வேலைவாய்ப்புத் தொடர்பில் தேசிய அளவில் பின்பற்றப்படும் கொள்கையும் ஒரு காரணமாக குறிப்பிடத்தக்கது.
தாம் ஆட்சிக்கு வந்தால் இத்தனை ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்கிற விடயத்தை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கும் தேசிய கட்சிகள் பலவுண்டு.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதுகூட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்கிற வாக்குறுதி அதிக வாக்குகளை அள்ளித்தரும் விடயமாக மாறியது.
இவ்வாறு அதற்கு முந்தைய அரசுகளிலும் ஒரே தடவையில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அரச தொழிலைப் பெறுவதற்கான நியமனங்கள் ஜனாதிபதிகளாலும், பிரதமர்களாலும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் மட்டுமே உள்ள நடைமுறை
தொழில்சார் திறன்கள், பரீட்சைகள், பயிற்சிகள், முறைப்படியான தகுதிகாண் நேர்காணல்கள், அவர்களுக்காக ஒதுக்கப்படும் கடமைகள், வேலையிடங்களின் அளவு ஏதுமின்றி கும்பலாக அரச பணிக்கு ஆட்சேர்க்கும் பொறிமுறை இலங்கையில் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றது.
இந்தப் பொறிமுறையில் மாற்றம் செய்யாது தொடர்ந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதும் அதனை ஒரு தேசிய கொள்கையாகப் பிரகடனம் செய்வதும் அரசியல்வாதிகள்தான். தாம் வாக்குப் பெறுவதற்காகவும், தம் கட்சியின் ஆட்சி நீடித்து நிலைப்பதற்காகவும் இவ்வாறான ஆட்சேர்ப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசியல்வாதிகள்தான் இங்கு விமர்சிக்கப்படவேண்டும். கேள்விக்குட்படுத்தப்படல் வேண்டும்.
முன்பராயப் பிள்ளைக் கல்வி, பாடசாலைக் கல்வி, உயர்கல்வி, பட்டப்பின் கல்வி என இலங்கையில் கற்றல் படிநிலைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவை வைத்திருக்கின்ற உள்ளீடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை.
முன்பராயக்
கற்றலில் பிள்ளையின் சுயத்தேடலையும், சுய படைப்ப்பாக்கத்திறனையும்,
பகுத்தறிவையும் மேம்படுத்தும் கற்பித்தல் மிகக்குறைவு.
அதனையடுத்து பாடசாலைக் கல்வியிலும் அதேநிலைதான். அறிவியலையும், பகுத்தறிவையும் வளர்க்கும் கற்பித்தல் செயற்பாடுகளில் பாடசாலைப் பிள்ளைகள் மிகக்குறைவான நேரத்திலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாடசாலைக் கல்வியானது பிள்ளைகளின் தனித்துவங்களை அடையாளங்காண்பதைத் தவிர்த்து, அடுத்துவரும் உயர்கல்விக்கான வடிகட்டல் நிலையங்களாகத் தொழிற்படுகின்றன.
அரசியல்நலனுக்காகக் தேசியக் கொள்கையாகக் கொண்டுவரப்பட்ட உயர்கல்விக்கான தரப்படுத்தல்கூட பாடசாலைகளை வடிகட்டல் மையங்களாக மாற்றியிருக்கின்றது.
இவ்வாறு பாடசாலைக் கல்வியின் முடிவில் வடிகட்டப்பட்டு இறுதி விளைவுகளாக வெளியேறும் மிகச் சொற்ப அளவிலான மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுகின்றனர். அந்தச் சொற்பமானவர்கள் மீளவும் கற்று பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். அவர்களுக்கு அரச தொழில் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படாத சமூக விதி. இந்த சமூக விதியே "கழுதை மேய்ப்பதாயினும் கவர்ன்மென்றில் மேய்த்தல் வேண்டும்" என்கிற கெளரவத்தை உருவாக்கிவைத்துள்ளது.
இங்கு குறிப்பிடப்படும் கற்பித்தல் படிநிலைகளிலும், சமூக விதியிலும் மாற்றம் நிகழாதவரைக்கும் அரச ஊழியர்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் சுமையை இறக்கி வைக்கமுடியாது.
பிள்ளைகளுக்கான கற்பித்தலில் தொழில் உருவாக்கமும், தொழில்சார் கல்வியும் முதன்மைப்படுத்தப்படாதவரைக்கும் அரச ஊழியத்தை எதிர்பார்க்கும் தரப்பினரது எண்ணிக்கை குறையவும் வாய்ப்பில்லை.
இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக் கல்வியில் அவர்தம்
வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் உதவாத ஒரு தொகை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
அதனைக் கற்பதனால் தமக்குக் கிடைக்கும் பயன் என்ன என்பதை அறியாமலேயே மாணவர்கள்
கற்றுக்கொண்டிருக்கின்றனர். சாறற்ற பண்டத்தை சப்பித்துப்புகின்றனர்.
இத்தகைய கல்வி முறை வழங்கும் அறிவோடுதான் மாணவர்கள் இந்த நவீன உலகை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்களால் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் தொழிற்றுறைகளோடு போட்டியிட முடிவதில்லை. நேரடியாக போட்டியற்ற அரச ஊழியத்திற்கு வந்துவிடுகின்றனர்.
அரச ஊழியமும் ஒருவர் பெற்றுக்கொண்ட கல்விக்கும், அதனால் அவர் அடைந்துள்ள அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்றாற்போல துறைசார்ந்து வழங்கப்படுவதில்லை. பல் துறைகளிலும் கல்வி கற்றவர்கள் அனைவரும் ஒரே தொழில் நியமனத்தையே பெறுகின்றனர்.
அதன் பின் அதுவரை அவர் கற்ற அனைத்தையும் கைவிட்டுப் புதிதாக நியமிக்கப்பட்ட அரச தொழிலுக்கு எது தேவையோ அதனைக் கற்க ஆயத்தமாகின்றனர். இதுவோர் இடையறாத சுழற்சியாக நடக்கிறது. இந்த சுழற்சியில் இலங்கைவாழ் அரச ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் 20 வருட இலவசக் கல்வியும், அதனால் அவரடைந்த அறிவும் பயனற்றுப்போகிறது.
துரிதமாக செய்யவேண்டிய சீர்திருத்தம் செய்யவேண்டிய இவ்வளவு விடயங்களையும் அப்படியே வைத்துக்கொண்டு அரச ஊழியர்களால்தான் நாட்டுக்குச் சுமை என விமர்சிப்பது எவ்விததிலும் பொருத்தமானதாக அமையாது.
உண்மையில் இலங்கையில் அரச உழியம் செய்யும் ஒருவரை, தனியார் துறைகளில், சுயதொழில்களில் வருமானம் பெறும் ஒருவருடன் ஒப்பிடுகையில் குறைந்தளவிலான உரிமைகளையே அனுபவிக்கிறார்.
நிரந்தரமானதொரு சம்பளம் மாதாமாதம் அரச ஊழியர்களுக்கு கிடைப்பதாயினும், அதில் பெரும் பகுதி வங்கிக் கடனுக்கான மீளப்பெறலாகத் திறைசேரிக்கே திரும்பிவிடும். மிச்சசொச்ச வருமானத்தில் மிச்சம்பிடித்து வாழும் வாழ்க்கையே அரச ஊழியர்களுடையது.
இரண்டு இருபத்தைந்தாம் திகதிகளுக்கிடையிலான அந்த 'பட்ஜெட் வாழ்க்கை' அடுத்த சம்பள வருகைக்கு முன்பான காலப்பகுதிக்கான சேமிப்பையும் செய்ய கட்டாயப்படுத்துகின்றது. பிள்ளைகளுக்கான கல்வி, மருத்துவம், சேமிப்பு என அனைத்தையும் இந்தச் சேமிப்பிலிருந்தே செலவுசெய்யவேண்டியுமிருக்கிறது.
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் உள அழுத்தம்
அரச ஊழியம் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் 'கெளரவமான தொழிற்சூழல்' என்கிற பிம்பம் ஊழியர்களின் நடை உடை பாவனை அனைத்தையும் ஓர் ஒழுக்கத்தின் கீழ் கொண்டுவருகிறது. வருமானம் இருக்கிறதோ இல்லையோ பகட்டானதொரு வாழ்வை வெளிக்காட்டவேண்டிய நிர்ப்பந்தம் அரச ஊழியர்களுக்கு உண்டு. சமநேரத்தில், அவ் ஒழுக்கம் அரச ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் உள அழுத்தங்கள் குறித்து யாரும் கவனமெடுப்பதில்லை.
சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் அனைத்து விதமான நெருக்கடிகளையும் அரச ஊழியர்கள் வாழ்வு முழுவதும் எதிர்கொள்கின்றனர்.
அரச ஊழியர்களில் பதவி நிலைகளுக்கு அமைவாகவே அரசியல் உரிமைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மனிதன் ஓர் அரசியல் பிராணி, அரசியலையும் மனிதனையும் பிரித்தே பார்க்கமுடியாது என்றெல்லாம் நடப்புத்தத்துவங்கள் உள்ளன. ஆனால் இலங்கையில் அரச ஊழியர்களுக்கான அரசியல் உரிமை, அரசியலை விமர்சிக்கும் உரிமை சுயதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
வேலை போய்விடும், இடம்மாற்றம்
கிடைத்துவிடும் போன்ற 'பயங்கரங்கள்' அரச ஊழியர்களை அரசியலிலிருந்து - அரசியல்
பேசுதலிலிருந்து ஒதுக்கிவைத்திருக்கிறது.
தமிழ் தேசிய அரசியல் சூழலில் ஓய்வுகால அரசியல்வாதிகளின் பெருக்கத்திற்கு இதுவும் ஒரு காரணம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவு அரச ஊழியர்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
நாட்டின் சகல தொழிற்துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூலியாளுக்கான நாட் சம்பளம்கூட 2500ரூபாய் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
எப்பொருளுக்கும் விலை நிர்ணயமற்ற சந்தைச் சூழலை, இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட 'பட்ஜெட் வாழ்க்கையுடன்' நிற்கும் அரச ஊழியர் எவ்வாறு எதிர்கொள்வது? அரச ஊழியர்களுக்கு இருக்கும் இவ்வளவு சுமைகளையும் கவனத்தில் கொள்ளாது, பொருளாதார வீழ்ச்சியின் மொத்த அழுத்தத்தையும் அவர்கள் தலையில் கட்டுவது எவ்வகையில் நியாயமானது?