ஐ.நா அமர்வு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது: ஜோதிலிங்கம் (Video)
இம்முறை ஐ.நா அமர்வு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (12.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ் மக்களுக்கு தேவையானது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரம். ஆகவே தான் ஐ.நா பிரேரணையில் நாம் தோற்று விட்டோம் என சமூக விஞ்ஞான மையம் கருதுகிறது. பொறுப்புக்கூறலிருந்து இருந்து மிகவும் கீழ் இறங்கியுள்ளது. அது தான் கவலைக்குரிய விடயம்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்பு
அத்துடன் நீதி விசாரணையை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் இங்கே புறக்கணிக்கப்பட்டுள்ளது.
குற்றம் செய்தவர்களையே விசாரணை செய்ய அனுமதிப்பது என்பது பயன் அற்ற விடயம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 13 ஆம் திருத்தம் போதுமானதாக இல்லை.
ஐ.நா பிரேரணையில் ஒன்றே ஒன்று தான் நன்மை தருகிறது. சாட்சியங்களை சேகரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது. உக்ரைன் போர் நடக்கும் போது உடனடியாக செயற்பட்ட சர்வேதேச நாடுகள், சர்வேதேச நீதி மன்ற விசாரணை வேண்டும் என்று முடிவு கொண்டு வரப்பட்டது. தமிழ் மக்களும் அப்படியொரு விசாரணையை தான் எதிர் பார்க்கிறார்கள்” என்றார்.