தாமதிக்கும் ஒவ்வொரு நொடிகள்! பாரிய விலையை செலுத்தும் இலங்கை !
தாமதிக்கும் நொடிகள்
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இலங்கை பாரிய விலையை செலுத்தி வருகிறது.
இது, இலங்கை நாட்டின் தவறு அல்ல. இலங்கை நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்து வருகின்ற நிர்வாகங்களின் தவறுகளாகும்.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், செய்யப்பட்ட காரியங்கள், பிரித்தானிய சாம்ராஜ்யம், தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொண்ட கைங்கரியங்களாக இருக்கலாம்.
குறிப்பாக பிரித்தாளும் கொள்கையை கூறலாம்.
பிரித்தாண்ட பிரித்தானியா
இனங்கள் மற்றும் மதங்கள் என்று இலங்கை மக்களை பிரித்தாளுகின்றபோது, தமக்கு எதிரான போராட்டங்கள் குறையும் மற்றும் அபிவிருத்தி ஏற்படும் என்பதே பிரித்தானியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதில் பிரித்தானிய சாம்ராஜ்யம் வெற்றியும் கண்டது.
எனினும் பிரித்தானியர்கள், இலங்கையை விட்டுச் சென்ற பின்னரும் இலங்கையின் நிர்வாகங்கள், தமக்கிடையில் இந்த கைங்கரியங்களை நடைமுறைப்படுத்தியமை தவறுகளாகவே கருதப்படவேண்டும்.
குறிப்பாக அவர்கள் கற்பித்த பிரித்தாளுகின்ற முறைமையை, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்துமே தீவிரமாக கடைபிடித்தன.
அன்று பிரித்தானியர்கள், நாட்டில் இருந்து வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக மற்றும் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக அறிமுகப்படுத்திய பிரித்தாளும் கொள்கையை, இன்று சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்கு வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
சிங்கள அரசியல்வாதிகள்
இது, நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அப்பால், தமது சொந்த இனத்தின்பால் கொண்ட அதீத பிடிப்புக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டன.
இதுவே இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான அடிப்படைகளாக அமைந்து விட்டன.
சுதந்திரத்துக்கு பின்னர், நாடு ஒன்றுபட்டிருக்கவேண்டும். இனங்கள் அனைத்தும் தாம் இலங்கையர்கள் என்ற ஒரே எண்ணத்தை வளர்த்திருக்கவேண்டும்.
எனினும் அது நடக்கவில்லை. மாறாக சிங்கள இனமே இந்த நாட்டை ஆளும் இனம் என்ற கொள்கை கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஏனைய இனங்கள், ஆளப்படுகின்ற இனங்களாக கருதப்படுகின்றன.
எனவே இந்த இனங்கள், சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில், எப்போதும் ஆளும் இனத்திடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஆளும் இனம், சிங்கள இனமாக இருந்தாலும் கூட, அது நாட்டின் நலன் கருதி, ஏனைய சிறுபான்மையின மக்களை திருப்திப்படுத்துவதே சிறந்த கொள்கையாக இருக்கும்.
எனினும் அதனை விடுத்து, தமது இனத்துக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கிவந்தமையானது, சிறுபான்மையினங்கள் தமது உரிமைகளுக்காக போராடும் எண்ணங்களை வளர்ப்பதற்கே வழியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக நாட்டில் இனப்பிளவுகள், மதப்பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
நீண்ட போர் இடம்பெற்றது, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
பலர் காணாமலாக்கப்பட்டனர்.
இதன் காரணமாக மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் இலங்கை, சர்வதேசத்தில் பேசப்படும் நாடாக, மாறியது.
இறுதியில் சர்வதேசம் இலங்கையின் அரசியல்வாதிகளை நம்பிக்கையில்லாதவர்கள் என்ற அடிப்படையில் கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் மத்தியிலும் பிளவுகள்
சிங்கள இனம் ஆளும் இனமாக தம்மை காட்டிக்கொள்ளும் நிலையில், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இந்த பிளவுகள் கடுமையாகவே உள்ளன.
வடக்கு, கிழக்கு மலையகம் என்ற பிளவுகள் இன்னும் மறையவில்லை.
தமிழீழ போராட்டத்தின்போது, இந்த பிளவுகள் மறைந்திருந்தபோதும் தற்போது, அந்த பிளவுகள் தொடர்கின்றன.
வடக்கு கிழக்கின் அரசியல் கட்சிகள் அந்த பிரதேசங்களுக்காகவும், மலையக அரசியல் கட்சிகள் தமது பிரதேசங்களுக்காகவும் பேசுகின்றன.
மாறாக, இந்த இனங்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சிக்கவும் இல்லை.
முன்னர், போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, வடக்கு,கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்கள், பாதுகாப்பு என்ற அடிப்படையில் பிரிந்து செயற்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தற்போது, அந்த பிரச்சினை இல்லை.
என்றாலும், பிரதேச அரசியலை புறந்தள்ளி விட்டு மக்களை ஒன்றிணைத்து செயற்பட, தற்போதைய தலைமைகள் தயாரில்லை.
இது, தாம் ஆளும் இனம் என்று தம்மை காட்டிக்கொள்ளும் சிங்கள அரசியல்வாதிகளின் பிரித்தாளும் கொள்கைக்கு வழியேற்படுத்திக்கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைகிறது.
மறுபுறத்தில் பார்க்கின்றபோது,அந்த சிங்கள அரசியல்வாதிகளுக்கு அதற்கான வாய்ப்பை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல்வாதிகள் வலிய ஏற்படுத்திக்கொடுத்து வருகின்றனர்.
பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு தாமதம்
சரி, சொந்த இனத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய நிலையில் மீண்டும், தேசிய மட்ட அரசியலுக்கு செல்வோம்.
1948ஆம் ஆண்டுக்கு பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளை, அரசாங்கங்கள் தீர்ப்பதற்கு முன்வரவில்லை.
மாறாக, அதனை வளர்த்து தமது அரசியலை முன்னெடுத்துச் செல்லவே அந்த அரசாங்கங்கள் முயன்று வருகின்றன.
1956,1974, 1983 போன்ற வருடங்களில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும், 2014 மற்றும் 2018 இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், அரசாங்க நிர்வாகங்களாலேயே துாண்டிவிடப்பட்டன.
அல்லது அதற்கு துணைபோயின.
இந்தநிலையில், நாட்டின் மீது அபிமானம் கொண்ட அரசாங்கங்கள் என்ற வகையில், அந்த வன்முறைகள் ஏற்பட்ட காரணங்களை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை.
பதிலாக அவ்ற்றை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
சிங்கள மக்களின் ஆட்சி
எனவே இந்த செயற்பாடு, நாட்டில் முழுமையாக சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்தியதே தவிர, நாட்டின் மீது அனைத்து இனங்களும் பற்றுக் கொள்வதற்கு வழியை ஏற்படுத்தவில்லை.
சிங்கள அரசியல்வாதிகள், இந்தளவுக்கு இனங்களை பிரித்து நாட்டை சீரழித்தமைக்கான காரணங்களை தேடிப் பார்க்கும்போது, சர்வதேசத்தின் சூழ்ச்சி இதற்கான காரணமாக இருக்கலாமா? என்பதை ஆராய வேண்டியுள்ளது.
அவ்வாறு இருந்தால், வெளிநாடுகளின் ஆதிக்கம் இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு இலங்கையில் உள்ள நிர்வாகங்கள் தோல்வி கண்டுள்ளன என்றே கருதவேண்டும்.
இந்திய சுதந்திரம்
இந்தியா சுதந்திரம் பெற்றமைக்கு பின்னால் பாரிய சுதந்திரப்போராட்ட வரலாறு உண்டு.
ஆனால், இலங்கையை பொறுத்தவரை இரத்தம் சிந்தாதப் போராட்டம் மூலமே, தமது நாடு சுதந்திரமடைந்ததாக இலங்கையின் அரசியல்வாதிகள் கூறிக்கொள்கின்றனர்.
இது கூட இலங்கையில் உள்ள இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படாமைக்கான காரணம், என்று கருதலாம்.
பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின்போது தமிழர்,சிங்களவர், முஸ்லிம்கள் என்று அனைவரும் இணைந்து போராடியபோதும், அது இந்தியாவின் போராட்டங்களைப் போன்று தீவிரமாக அமையவில்லை.
மேல் வர்க்கப்போராட்டம்
அத்துடன் அந்த போராட்டம், இந்தியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் ஒரு தாக்கமாக இருந்ததுடன், இது மேல் வர்க்க போராட்டமாக மாத்திரமே இருந்தது.
இதன் காரணமாகவே, அடிமட்டத்தில் இனங்களுக்கு இடையில் ஒன்றுமை ஏற்படவில்லை என்றும் கருதுகோள் உள்ளது.
இந்தியாவில் தமிழ் நாடு,கேரளா, ஆந்திரா, குஜராத், காஷ்மீர், பஞ்சாப் என்று இனங்களால் மாநிலங்கள் பிரிந்து செயற்பட்டாலும், தமிழகத்தில் சாதியக்கொள்கைகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர்களே என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் அவ்வப்போது ஏற்பட்ட பிரித்தாளும் கொள்கை காரணமாக இலங்கையர்கள் இன்றும் தாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தையே முன்னிலைப்படுத்துகின்றனர்.
எனவே, இலங்கை அரசாங்கங்கள், பிரச்சினைகளை தீர்ப்பதில் காட்டிய பின்னடிப்பு, அல்லது தாமதங்கள் காரணமாக ஏற்பட்ட மூளைச்சாலிகளின் வெளியேற்றம், சொத்திழப்புக்கள், மோசடிகள் மற்றும் என்பனவே இன்று நாடு எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.
இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கு இலங்கையர்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு தற்போதைய நிலையைக் காட்டிலும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.
எனவே அதற்கான விலையை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
ஜனநாயகத்துக்கான பாதை திறப்பு
சரி, வரலாற்றை அப்படியே வைத்து விட்டு, தற்போதைய சூழ்நிலைக்கு வருவோம். தற்போது, அரசாங்கங்களின் தவறான கொள்கை காரணமாக, கடும் கோபமடைந்த மக்கள், வீதியில் போராட முன்வந்துள்ளார்கள்.
இதன்போது அவர்கள் மத்தியில் சுதந்திரப்போராட்டத்தை போலன்றி, இன ஒற்றுமை அதிகமாகவே நிலவுகிறது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை யாரும் எதிர்பார்க்கமுடியாத நிலையில், முடிவு! அவன் விட்டபடியே! என்ற நிலைக்கும் வந்துள்ளது.
எனவே எது நடந்தாலும், இலங்கையில் புதிய ஜனநாயகம் ஒன்றுக்கான பாதையை, தற்போது இடம்பெறும் போராட்டம் அல்லது தற்போது நாட்டின் இறுகலான சூழ்நிலை பெற்றுத்தரும் என்றே அனைவரும் நம்புவோம்.