இலங்கையில் சிங்களவர்களை தூண்டிவிட சதி - அதிரடி நடவடிக்கையில் அரசாங்கம்
புத்தரை அவமதித்து பௌத்தர்களை தூண்டிவிட திட்டமிட்ட சதி நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ புத்தரை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்து மற்றும் நடாஷா எதிரிசூரிய என்ற பெண்ணின் கருத்து ஆகியற்றின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து இன்று ( ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பௌத்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு
மேலும், ஜெரம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா எதிரிசூரிய ஆகியோரின் கருத்துக்களுடன் தொடர்புடைய இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்தினால் பௌத்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடாஷா எதிரிசூரிய என்ற பெண், புத்தரை அவமதிக்கும் வகையில் மேலும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், குறித்த பெண் சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் தான் தெரிவித்த கருத்து வேண்டுமென்றே வெளியிடப்பட்ட கருத்து அல்ல எனவும், பௌத்தர்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் நடாஷா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |