இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் சபையில் நளின் பண்டார பகிரங்க குற்றச்சாட்டு (Live)
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இன்று ஒரு சூதாட்டக் களமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆசிய கிண்ணத்தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடமிருந்து கைநழுவியமை தொடர்பில் நான் வெளியிட்ட கருத்தை இலங்கை கிரிக்கெட் தலைவர் ஊடக சந்திப்பொன்றில் விமர்சித்திருந்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை
அதற்கு நான் அளித்த பதில் கருத்துக்கு 2 பில்லியன் ரூபாவை அவமதிப்பு நட்டஈடு கோரி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினால் சட்டக்கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் 3ஆவது உறுப்புரைக்கமைய, நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட, விவாதிக்க உரிமையுள்ளது.
அது தொடர்பில் நாடாளுமன்றுக்கு வெளியில் வழக்கு தொடரவோ, கேள்வி எழுப்பவோ முடியாது. எனவே எனது நியாயமான கருத்துக்காக சட்டக்கடிதம் அனுப்பியமை காரணமாக சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தான் தோன்றித்தனமாக செயற்படுகிறார்.
கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள சிக்கலினாலேயே ஆசிய கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு கைநழுவியது. இலங்கை கிரிக்கெட தலைவர் என்மீது சிஐடியில் பொய்யான முறைப்பாடு செய்துள்ளார். நான் கோப் குழு உறுப்பினர் என்ற வகையில், அவரை குழுவுக்கு அழைக்க எதிர்பார்த்துள்ளேன்.
வேறு நாடுகளில் டி20 தொடர்களை அந்தந்த கிரிக்கெட் சபைகளே நடத்துகின்றன. இலங்கையில் சூதாட்டகாரர்களுக்கு அடி பணிந்தவர்களே இந்த போட்டிகளை நடத்துகின்றனர். காலியில் இடம்பெற்ற போட்டியொன்றில் 400 ஓட்டங்களைப் பெற்றும் இலங்கை தோல்வியுற்றது. இதற்கு ஆட்டநிர்ணயமே பிரதான காரணம்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் மீது குற்றச்சாட்டு
2014 உலகக் கிண்ணத் தொடரில் எந்தவொரு வீரரும் காயமடையவில்லை. இன்று அநேக வீரர்கள் காயமடைகின்றனர் . இதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும். அமைச்சரவை அமைச்சர்களை இலங்கை கிரிக்கெட் தலைவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
தற்போதைய அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால் அவருக்கு எதிராக சேறு பூசிகிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாக சபையை உடனடியாக கலைத்துவிட்டு இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ யோசனையொன்றையும் முன்வைத்துள்ளார்.