வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைப் போல் கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும் : ரணில் திட்டவட்டம்(Photos)
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அரசியலை மாற்றியமைக்கும் வரவு - செலவுத் திட்டம்
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
"இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும்.
2024ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும் வரவு - செலவுத் திட்டமாகும்.
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலக்கை ஏற்கனவே நான் நெருங்கிவிட்டேன். அரசியல் நோக்கின்றி அந்த இலக்கை அடைய எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் 2024 வரவு - செலவுத் திட்டம் மற்றும் அதன் அடிப்படை குறித்து இங்கு நீண்ட விளக்கமளித்தனர்.
வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.