ஊழலற்ற சிறந்த நாட்டை உருவாக்குவோம் - ஆளும் தரப்பு தெரிவிப்பு
ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக இலங்கையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி வருகின்றோம் என பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
இன்று(20.07.2026) திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைப்பெற்ற நீண்ட காலமாக நிலவி வந்த காணி சம்மந்தமான பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணி கச்சேரி நடமாடும் சேவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு
காணி கச்சேரி நடமாடும் சேவை
இந்த நடமாடும் சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,
காணிக்கான ஆவணங்களை பெற பலமுறை முயற்சித்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில் காணிக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றன.

இதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் தம்பலகாமம் பிரதேச செயலாளருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம். முன்னர் நடைபெற்ற காணி நடமாடும் சேவையில் கடந்த கால அரசாங்கம் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் இன்றைய காணி நடமாடும் சேவையினர் எதிர்வரும் திங்கட்கிழமை காணி உரிமை பத்திரத்தை பெற்று தருவோம் என கூறினார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
ஊழல் மோசடி அற்ற நாடு
இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர,
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் மூவின சமூகங்களை சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.

இங்கு பல காணி பிணக்குகள் காணப்படுகின்றன இதனை தீர்க்க முயற்சித்து வருகிறோம். இலங்கை பல்வேறு தரப்பட்ட பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி உலகளாவிய ரீதியில் தலைசிறந்த நாடாக மாறிவருகிறது.
ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் இல்லாத சிறந்த அரசியல் கலாசாரம் கொண்ட நாடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையின் கீழ் நாம் கட்டியெழுப்பி வருகின்றோம்.
மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு
அத்துடன் சிறந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னேற வேண்டும். எந்த சவாலாக இருந்தாலும் அதற்கு முகங்கொடுத்து முன்னேறி வருகிறோம்.

பல பிரச்சினைகள் இருந்தாலும் சரியான முகாமைத்துவத்தின் ஊடாக அவற்றை கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் நிச்சயமாக மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் சேவையில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர கலந்து கொண்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொது மக்கள், காணி ஆணையாளர் என். அருள் செல்வன், தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.