இலங்கை புலனாய்வுப்பிரிவு அலுவலகத்திற்குள் நுழைந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்! சபையில் வெளியான தகவல் (Video)
இலங்கையின் புலனாய்வுத்தரவுகள் அனைத்தும் அமெரிக்கப் புலனாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (22.02.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்களின் ஆயுதங்களை களைந்த பின், ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் பிரவேசித்துள்ளனர்.
இலங்கையின் புலனாய்வுத்தரவுகள்
இதன்மூலம் இலங்கையின் புலனாய்வுத்தரவுகள் அனைத்தும் அமெரிக்கப் புலனாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2001ஆம் ஆண்டு இவ்வாறான நிலைமை தோற்றுவிக்கப்பட்ட போதும், அது பின்னர் 2004ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்து பசுபிக் பாதுகாப்பு துணை உதவிச்செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையில், இலங்கைக்கு வந்தவர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்களின் இலங்கைக்கான பயண நோக்கம் என்ன? ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு செயலாளருடன் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விடயத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.