நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பெரிய வெள்ளி ஆராதனைகள்
யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளி தினமான இன்று நாடளாவிய ரீதியில் தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி இன்று காலை இடம்பெற்றது.
இவ் கூட்டுத்திருப்பலி யாழ். மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையும், மறைமாவட்ட ஆயரும் ஆகிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.
இந்த நிகழ்வில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தினை பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரியவெள்ளி ஆராதனைகள் இன்று (07.04.2023) இடம்பெற்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை சஹ்ரான் காசிமின் தலைமையில் தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளால் குறிவைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் படுகாயமடைந்தனர்.
எனவே எதிர்வரும் 9ஆம் திகதி வரை உயிர்த ஞாயிறு தினம் வரையில் தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளின் போது தொடர்ந்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பவண்