இலங்கை தொடர்பில் சீனா வழங்கியுள்ள உறுதிமொழி
இலங்கைக்கு எவ்வித குந்தகமும் இழைக்கப் போவதில்லை என சீனா உறுதிமொழி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதனையும் செய்யப் போவதில்லை எனவும், எப்போதும் மெய்யானதும், நம்பகமானதுமான நட்பு நாடாக சீனா திகழும் எனவும் தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கையுடன் மரபு ரீதியாக மிக நீண்ட காலமாக ஸ்திரமான நட்புறவு நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நெருக்கடியான தருணங்களில் இலங்கைக்கு உதவி வழங்குவதற்காக நன்றி பாராட்டுவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் சீனாவின் 'கடன் பொறி' என்று கூறப்படும் கூற்றை மறுத்த சப்ரி,
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்தை மட்டுமே சீனா கொண்டுள்ளது என்று
வலியுறுத்தியுள்ளதுடன், சீனாவின் உதவி இல்லாமல் இலங்கை எந்த வளர்ச்சியையும் அடைந்திருக்காது என்றும்
அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.