ஏப்ரல் 1 முதல் புதிய வரி நடைமுறை! 800 பொருட்களுக்கு கிடைக்கும் சலுகை
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்களுக்கு விதிக்கப்படும் CESS வரியை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் குறைப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய வரி அட்டவணைகளின்படி, இடைநிலைப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் என இரண்டு பிரிவுகளின் கீழ் மொத்தம் 800 வரி வகைப்பாடுகளுக்கு (Tariff Lines) இந்த வரிக் குறைப்பு முன்மொழியப்பட்டுள்ளது.
50 சதவீதம் வரை
இதில், உள்நாட்டுத் தொழில்துறைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கிய 107 வரி வகைப்பாடுகளுக்கான பட்டியலில், தற்போது நடைமுறையில் உள்ள CESS வரி விகிதத்தை 25 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் தெரிவுசெய்யப்பட்ட சிமெந்து வகைகள், வர்ணப் பூச்சுகள், டயர்கள், பொதியிடல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், 693 வரி வகைப்பாடுகளைக் கொண்ட மற்றுமொரு பட்டியலில், தற்போதுள்ள சில CESS வரி விகிதங்களை 50 சதவீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், பட்டியலிடப்பட்ட பொருட்களுக்கான CESS வரியைப் படிப்படியாக நீக்கும் நோக்கில், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மேலதிக வரிக் குறைப்புகளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் இந்த வரி அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரிக் குறைப்பு முன்மொழியப்பட்டுள்ள இறக்குமதிப் பொருட்கள் மற்றும் அவற்றுக்கான புதிய CESS வரி விகிதங்கள் அடங்கிய முழுமையான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.