‘‘ஒன்றாரியோ சட்டமன்ற தீர்மானம் குறித்து இலங்கை கரிசனை’’
ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பில் இலங்கை கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் (David McKinnon), வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் இலங்கைக்கு கனடா வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் நன்றி பாராட்டியுள்ளார்.
கனடாவின் தற்போதைய கோவிட் நிலைமைகள் மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து உயர்ஸ்தானிகர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒன்றாரியோ சட்ட மன்றில் இலங்கையில் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்றதாக தனிநபர் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இதனை எதிர்ப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானத்திற்கு எதிராக ஒன்றாரியோ உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால பயங்கரவாத பிரச்சினைகளிலிருந்து மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த தீர்மானம் நிறைவேற்றம் மாகாண சட்டமன்றினால் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனவும் இது குறித்த மேலதிக விபரங்களை வழங்குவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிதுள்ளார்.