சீன கப்பல் விவகாரத்தில் இலங்கை சுயாதீனமான தீர்மானம் எடுக்க முடியும் - இந்தியா அறிவிப்பு
யுவான் வாங்-5 என்ற சீன ஆய்வுக் கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் தொடர்பில் இலங்கை சுயாதீனமான தீர்மானத்தை எடுக்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (12) செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன், கப்பலின் இலங்கை விஜயம் தொடர்பில் சீனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளதாவது,
யுவான் வாங்-5 கப்பல் தொடர்பான அறிக்கைகள் மற்றும் கருத்துகளுக்கு எங்கள் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தியா எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் அங்கு பார்க்கலாம், இதுபோன்ற கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன்
இந்தியா மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அவர்கள் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியும். இது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை உரிமையுடன் தொடர்புடைய விடயமாகும்.
எங்கள் லட்சியங்களுக்கு ஏற்ப நாங்கள் சிறந்த முடிவுகளை எடுக்கிறோம். இது பிராந்தியத்தின் நிலைமை, எல்லை நிலவரத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து, பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல் மற்றும் பரஸ்பர அபிலாஷைகள் ஆகியவை அந்த உறவுகளை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று (11) வந்தடையவிருந்த சீனக் கப்பல் இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 614 கடல் மைல் தொலைவில் தரித்து நிற்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கப்பலின் பயணத்தை தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு சீனத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கப்பல் இலங்கையை நோக்கி வருவதாக அண்மையில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதன்படி 29 நாட்களாக கப்பல் எந்த துறைமுகத்திலும் நுழைந்து எரிபொருளையோ உணவையோ பெறாமல் கடலில் பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவான் வாங்-5 கப்பல் இலங்கை, சீனா, இந்தியா மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடியாக மாறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு இலங்கை விசேட சலுகைகள்
கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயத்தில் இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பலத்த செல்வாக்கு செலுத்தியதாக அந்த நாளிதழ் குறிப்பிடுகிறது.
சீனக் கப்பலின் விஜயம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதிப்பதன் மூலம் சீனாவுக்கு இலங்கை விசேட சலுகைகளை வழங்கி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளின்படி, நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்காக சீனா அத்தகைய நடவடிக்கையை எதிர்பார்க்கிறது என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீன ஆய்வுக் கப்பல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சுயேச்சைக் கட்சிகள், சம்பந்தப்பட்ட கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தன.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் பாதுகாக்கப்படும் வகையில், இராஜதந்திர வழிகளில் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.