இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்கள் - வளர்ச்சி காணும் சுற்றுலாத்துறை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள போதும், சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பி வருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் மொத்தம் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஒக்டோபர் 1 முதல் 7 வரை 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபர் 08 முதல் 14 வரை 9 ஆயிரத்து 125 சுற்றுலாப் பயணிகளும், உக்டோபர் 15 மற்றும் 16 ஆம் திகதி 2 ஆயிரத்து 834 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை வந்துள்ளனர்.
இந்தியர்களின் வருகை அதிகரிப்பு
இந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலா துறையின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா காணப்பட்டுள்ளதுடன் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலா பயணிகளில் 20% மானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
அதைத் தொடர்ந்து ரஷ்யா 14 சதவீதத்தையும், பிரித்தானியா 10 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.