தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச தரைப்பால இணைப்புத் திட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என கத்தோலிக்க திருச்சபை எச்சரித்துள்ளது.
தரைப்பாலம்
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith), கடந்த வெள்ளிக்கிழமை கேகாலை - ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, இந்த தரைப்பாலம் காரணமாக, இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.
வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து படையெடுப்பாளர்கள் இந்த நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி ஆள வந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சிங்கள மன்னர்கள் அவர்களை அகற்றவும், அந்தப் பகுதிகளை விடுவிக்கவும் படைகளைத் திரட்ட வேண்டியிருந்தது.
இந்தநிலையிலேயே தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம், தமிழகத்தையும் இலங்கையையும் இணைக்கும் தரைப்பாலத்தை அமைக்க முன்வருகிறது.
மக்களின் கோரிக்கைகள்
இது நிச்சயமாக இந்த நாடு தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறுவதில் முடிவடையும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நில இணைப்புக்கு முன்னரான சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்து, விரைவில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த சில நாட்களில், பாலம் திட்டம் குறித்து கர்தினாலின் விமர்சனம் வெளியாகியுள்ளது
மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவை கடந்த ஜூன் 16 ஆம் திகதி மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்
இந்தப் பாலம் யாருக்குத் தேவை? இங்குள்ள மக்களின் கோரிக்கைக்காக அல்ல வெளிநாட்டவர்களின் கோரிக்கையை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
மோசமான நெருக்கடி
வெளியில் இருந்து வரும் அனைத்து உத்தரவுகளும் நமக்கு நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல் நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.
நமக்குப் பிரயோசனமில்லாததைச் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஏற்கனவே உள்ளதை விட மோசமான நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியேற்படும்.
எனவே இலங்கையின் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் கேடு விளைவிக்கும் எதையும் செய்யக் கூடாது என்று கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக 2023 ஜூலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தரைப்பாலத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
