இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை - தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து
கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் சற்று வழமை நிலை திரும்பியுள்ள போதும், நாளை முதல் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையை அண்மித்த பகுதியில் நிலை கொண்டிருந்த தித்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை புயல் தாக்கும் அபாயம்
நாளையதினம்(30.11.2025) தமிழகத்தை புயல் தாக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் இலங்கையின் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60 முதல்70 கிலோமீற்றர் வரையான பலத்த காற்று வீசுவதுடன் இடைக்கிடையே அதன் வேகம் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
மலையகம் முழுமையாக முடங்கியுள்ளதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பலர் இடர்காப்பு முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri