மிகவும் ஆபத்தான வானிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை அடுத்து வரும் நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தாழமுக்கம் வடக்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையுடன் கூடிய கடும் காற்று
இந்த தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழையுடன் கூடிய கடும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 200 கிலோமீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த மழைவீழ்ச்சி
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமைகளை கவனத்தில் கொண்டு மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.