இலங்கையின் இராணுவத்தளபதிக்கு புதுடெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு
இலங்கையின் இராணுவத்தளபதி புதுடெல்லியில் தனது இந்திய இராணுவத்தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் அழைப்பின் பேரில் நேற்று புதுடெல்லியில் உள்ள இந்திய இராணுவத் தலைமையகத்துக்கு இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே சென்றபோது சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இலங்கை இராணுவத்தளபதி தேசிய போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவப்படையணியினர், இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேக்கு கௌரவ மரியாதை அணிவித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்நிலையில் இந்திய இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில், இலங்கையின் இராணுவத்தளபதி, இந்திய இராணுவத்தின் இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுடன் முறையான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இரு படைகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.
இலங்கை இராணுவத்தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்புகள் மற்றும் இருதரப்பு விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட இலக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன' என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.