கல்வௌ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் வணக்கத்துக்குரிய கல்வௌ சிறிதம்ம தேரர் சுகவீனம் காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வௌ சிறிதம்ம தேரர், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க ஆகியோரை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி அன்றில் இருந்து 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்
ஆகஸ்ட் 18 அன்று கொழும்பு யூனியன் பிளேஸில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணியைத் தொடர்ந்தே இந்த மூன்று செயற்பாட்டாளர்கள் உட்பட பல எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரினால் அமைக்கப்பட்ட வீதித் தடைகளையும் மீறி நகர மண்டப பகுதி ஊடாக யூனியன் பிளேஸ் நோக்கி பேரணியாகச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக இந்த
எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.