அரசாங்கம் போராட்டகாரர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சிக்கின்றது: சுனில் வட்டகல (Video)
அரசாங்கம் போராட்டகாரர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சித்து வருவதாகவும் அவற்றுக்கு அஞ்சப் போவதில்லை என சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராகவும், தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று மருதானை சி.எஸ்.ஆர் மண்டபத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் ஒரு குமுவினரால் ஊடகசந்திப்பொன்று நடைபெற்றது.
இவ் ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"சம்பந்தப்பட்ட அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் இழப்பீடு செலுத்த நேரிடும் என்று கூறி கைது செய்ய போகின்றனர்.
தோழர் எரங்க குணசேகர பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு அறிக்கைகளை நாங்கள் ஆய்வு செய்தோம். எந்த வழக்கு அறிக்கைகளிலும் எரங்க குணசேகரவுக்கு எதிராக எந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
பிடியாணை இருக்கின்றது என்று கூறி கைது செய்ய வீட்டுக்கு வருகின்றனர். 11 பேர் கொண்ட பொலிஸ் குழு இரண்டு தினங்களில் 5 எரங்க குணசேகரவின் வீட்டுக்கு வந்து சென்றது.
5 முறை வந்து பிடியாணை இருப்பதாக கூறினர், பிடியாணையை காட்டுமாறு கூறினால், அதனை காட்டாமல் திரும்பி செல்கின்றனர். இல்லாத பிடியாணையை எப்படி காட்டுவார்கள்.
வீடுகளுக்கும், பகிரங்க இடங்களுக்கு சென்று செயற்பாட்டாளர்களை அடக்குவோம் என்ற சமிக்ஞைகளை காட்டுகின்றனர். நாங்கள் அவற்றுக்கு பயப்பட போவதில்லை.
சட்டத்தரணிகளின் நடவடிக்கை
இதன் காரணமாக சட்டத்தரணிகள் என்ற வகையில் அனைத்து இடங்களுக்கும் வந்து கண்காணித்து வருகின்றோம். அதற்கு அப்பால் தலையீடுகளை மேற்கொள்வோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக ஊடகங்கள் காணப்படுகின்றன. கைது செய்து வரும் எண்ணிக்கைக்கு அமைய நீதிபதிகள் பிணை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
நாங்களா நீதிமன்றத்தை அவமதிக்கின்றோம். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சில அதிகாரிகள் போராட்டகாரர்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் நீதிபதிகள் போராட்டகாரர்களுக்கு பிணை வழங்குவதாகவும் சனத் நிஷாந்த கூறியுள்ளார்.
சாட்சியங்கள் இல்லாவிட்டால் பிணை வழங்கி விடுதலை செய்வதே நீதிபதிகளின் பணி. நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் அனைவரையும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கின்றார். அரசாங்கத்தின் நோக்கமும் அதுதான் என சுனில் வட்டகல கூறியுள்ளார்.