விபத்தில் காயமடைந்த இளம் தந்தை உயிரிழப்பு - விபத்தை ஏற்படுத்தியவர்களின் மோசமான செயல்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புலிச்சாகுளம் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் வேன் மோதியதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியை> விபத்து இடம்பெற்ற அதே வேனில் ஏற்றிச் சென்றதாகவும் வேண்டுமென்றே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதனை தாமதப்படுத்தியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதான அஷான் மதுஷன் மெண்டிஸ் என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
அம்புலன்ஸ் வண்டியை கொண்டு வந்து மதுஷானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேசவாசிகள் முயற்சித்தனர்.
இருந்த போது வேனில் இருந்தவர்கள் அவரை அதே வேனில் ஏற்றி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறி புத்தளம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்குப் பதிலாக, விபத்து இடம்பெற்று சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் சுமார் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுஷனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவர்கள், படுகாயமடைந்து வீதியில் வீழ்ந்த கிடந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். எனினும் அதிக இரத்தப்போக்கு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மதுஷனின் வலது கால் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த முந்தலம பொலிஸார், விபத்து நடந்த இடத்தில் விழுந்த வேனின் உரிமையாளரை இலக்கத் தகடு மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் வேனை வேறு ஒருவருக்கு விற்றதாகவும், ஆனால் அது இதுவரை தனது பெயருக்கு மாற்றப்படவில்லை எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வாகனத்தை கொள்வனவு செய்த நபரையும், வேனின் சாரதியையும், விபத்தின் போது அங்கிருந்த மேலும் இருவரையும், வேனையும் பொலிஸார் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் பொலிஸாரிடம் அழைத்துச் சென்றபோது மதுஷனின் உறவினர்களும் ஏனையோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய மதுஷனை வேனில் ஏற்றிக்கொண்டு, வழியில் நிறுத்தி முச்சக்கரவண்டி ஒன்றைக் கொண்டு வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த மதுஷனை சுமார் 3 மணித்தியாலங்கள் விபத்துக்குள்ளான வேனுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் வேனை மன்னாருக்கு எடுத்துச் சென்று மறைத்ததாகவும் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வேன் சாரதி, உரிமையாளர் மற்றும் மற்றுமொரு சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.